புதுவை அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாமல் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு


புதுவை அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாமல் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Dec 2018 5:00 AM IST (Updated: 6 Dec 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாமல் ஏழை எளிய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஆயுஸ்மான் பாரத் என்ற இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது. இந்த திட்டம் 10 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி ஏழை எளிய மக்கள் பயனடையும் திட்டமாகும். பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால் புதுவை மாநில காங்கிரஸ் அரசு இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்கள் இதயம், சிறுநீரக பாதிப்பு மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு ரூ.2 முதல் ரூ.3லட்சம் வரை செலவு செய்து சிகிச்சை பெற முடியாமல் உள்ளனர். மத்திய அரசின் கணக்கெடுப்பில் புதுவை மாநிலத்தில் 1லட்சத்து 3 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமி இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் முன்பு இருந்த திட்டத்தை விரிவு படுத்தி ரூ.5லட்சம் என அமல்படுத்தி உள்ளனர். ஆனால் புதுவை அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாமல் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை புதுவை அரசு உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தனது கட்சியினரை திருப்திபடுத்த வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற ரே‌ஷன்கார்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மஞ்சள் நிற ரே‌ஷன்கார்டும் குடிமை பொருள் வழங்கல் துறையின் மூலம் வழங்கியுள்ளது. எனவே ஏழை எளிய மக்கள் பிரதமரின் திட்டங்களை பெற முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

கடந்த 2½ ஆண்டுகளாக புதுவையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. புதுவையில் ரே‌ஷன்கார்டுகளை ஆய்வு செய்ய கவர்னர் கிரண்பெடி தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவினர் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு மட்டும் சிவப்பு நிற ரே‌ஷன்கார்டு வழங்க வேண்டும். தகுதியற்றவர்களின் கார்டுகளை மஞ்சள் நிற கார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story