மாவட்ட செய்திகள்

திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரிப்பு: வெளிமாநிலத்தவர்களை ரகசியமாக கண்காணிக்கும் போலீசார் - ஆவணங்கள் சேகரிப்பு பணி தீவிரம் + "||" + Preparation of false ahard card in Tirupur: Police secretly monitoring outlanders - The intensity of the collection of documents collection

திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரிப்பு: வெளிமாநிலத்தவர்களை ரகசியமாக கண்காணிக்கும் போலீசார் - ஆவணங்கள் சேகரிப்பு பணி தீவிரம்

திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரிப்பு: வெளிமாநிலத்தவர்களை ரகசியமாக கண்காணிக்கும் போலீசார் - ஆவணங்கள் சேகரிப்பு பணி தீவிரம்
திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரித்து தொழிலாளர்களுக்கு ஒரு கும்பல் வழங்கியது. இதனால் வெளிமாநிலத்தவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதுடன் அவர்களிடம் இருந்து ஆவணங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருப்பூர்,

பின்னலாடை தொழில் மூலம் உலக வர்த்தகர்களை தன்னோக்கி திரும்பி பார்க்க வைத்த ஊர் திருப்பூர். யார் வந்தாலும் இங்கு வேலை கிடைக்கும் என்பதால் வந்தாரை வாழவைக்கும் ஊராக திருப்பூர் விளங்கி வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் இங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். பனியன் வர்த்தகம் தொடர்பாக நைஜீரிய நாட்டினரும் திருப்பூரில் தங்கி சொந்த நாட்டுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.


இவ்வாறு திருப்பூர் நோக்கி வருபவர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. உரிய ஆவணங்கள் இல்லாத நைஜீரியர்களை போலீசார் கைது செய்து நாடு கடத்துவது இங்கு வாடிக்கை. வெளிமாநில தொழிலாளர்களோ, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த ஊர் தப்பி சென்று விடுவதால் திருப்பூர் போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதற்காக தொழிலாளர்களுக்கு முழு விவரங்களுடன் அடையாள அட்டை வழங்க பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதுஒருபுறம் இருந்தாலும் வங்கதேச நாட்டினர் இந்தியாவுக்குள் மேற்கு வங்கம் வழியாக ஊடுருவி திருப்பூர் வந்து பனியன் நிறுவனங்களில் தங்கி பணியாற்றி போலீசாரிடம் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது வங்கதேசத்தில் இருந்து ஒரு ஆற்றைக்கடந்து இந்திய எல்லைக்குள் வந்து மேற்கு வங்க மாநிலம் பர்க்கானஸ் மாவட்டம் வழியாக ரெயில் மூலமாக இவர்கள் திருப்பூருக்கு வருகிறார்கள்.

10 லட்சம் தொழிலாளர்களை கொண்ட திருப்பூரில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் மாநகர போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதைப்போல் போலி ஆதார் அட்டை இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு துணையாக இருந்த மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், போலி ஆதார் அட்டையை ராம்சிஷ் வர்மா என்பவர் தயாரித்து கொடுத்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆதார் அட்டை பதிவு செய்யும் ஏஜெண்டாக இருந்துள்ளார். அதை பயன்படுத்தி போலியாக ஆதார் அட்டையை வெளிமாநிலத்தவர்களுக்கு தயாரித்து கொடுத்துள்ளார். இதற்கு முகமது பாபுல் உசேன் என்பவர் புரோக்கராக செயல்பட்டுள்ளார். இவர்கள் ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். போலி ஆதார் அட்டையை ஆதாரமாக வைத்து ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் பெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் வெளிமாநிலத்தவர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களை ஆங்காங்கே போலீசார் திடீர் சோதனை நடத்தி அவர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த நபரை கைது செய்து விசாரித்தபோது கடந்த 8 ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து வெளிமாநிலத்தவர் மற்றும் வங்கதேச நாட்டினருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூரில் எத்தனை பேர் போலி ஆதார் அட்டையை வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஆதார் பிரிவு உயர் அதிகாரிகளின் உதவியை நாட்டியுள்ளோம். வெளிமாநிலத்தவர்கள் வந்தால் அவர்களிடம் ஆதார் அட்டையை பெற்று அந்த எண்களை ஆதார் பிரிவு தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கிறோம். அதில் போலிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இதற் காக வெளிமாநில தொழிலாளர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வங்கதேச நாட்டினர் கோர்ட்டு தண்டனை முடிந்த பிறகு அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் எண்களை பெற்று ஆதார் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் தெரிவித்த பிறகு தான் திருப்பூரில் எத்தனை பேர் போலி ஆதார் அட்டையுடன் பதுங்கி இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
திருப்பூரில் விஷம் குடித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
2. திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
3. திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடை - குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகளை குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
5. திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்
திருப்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.