கரூர், குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 648 வழக்குகளுக்கு சமரச தீர்வு


கரூர், குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 648 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 10:15 PM GMT (Updated: 8 Dec 2018 8:59 PM GMT)

கரூர், குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 648 வழக்கு களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் சமரச தீர்வு காணும் பொருட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று கரூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதனை கரூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் (பொறுப்பு), மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதியுமான சசிகலா தொடங்கி வைத்தார். இதில் வங்கி காசோலை வழக்கு, சிவில் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, குடும்பநல வழக்கு, கிரிமினல் வழக்கு உள்பட பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் தங்கவேல் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். கரூரில் மொத்தம் 4 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகளின் விசாரணை நடந்தது. இதில் குற்றவியல் நீதிபதி ரகோத்தமன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், வழக்கறிஞர் கணேசன், சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இதே போல், குளித்தலை சார்பு நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இங்கு குளித்தலை நீதித்துறை நடுவர் பிரஷ்னேவ், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாரியாயி, வழக்கறிஞர்கள் ஜெயராமன், ஜாபர்சேட், சமூக ஆர்வலர்கள் கவிதா, நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுகள் வழக்குகளை விசாரித்தன. கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,414 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அதில் 648 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு ரூ.19 கோடியே 83 லட்சத்து 99 ஆயிரத்து 788 பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.

Next Story