மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 2018-12-10T01:44:08+05:30)

மின் ஊழியர்கள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே உள்ள பகுதிகளில் கஜா புயலால் மின்மாற்றிகள், மின்கம்பங்கள் விழுந்தன. மேலும் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனையடுத்து சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி, சேதம் அடைந்த மின்மாற்றி, மின் கம்பங்களை மாற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சரி செய்யப்பட்ட பகுதிகளில் படிபடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று வெள்ளனூர் அருகே உள்ள தர்கா என்னும் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இன்னும் மின்சார பணிகள் முடியவில்லை. சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மின் ஊழியர்களை கந்தர்வக்கோட்டைக்கு சென்று விட்டதால் இப்பகுதிக்கு மின் ஊழியர்கள் இல்லை எனக்கூறி புதுக்கோட்டை-அண்டக்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-அண்டக்குளம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story