தனியார் நிதி நிறுவனம் ரூ.350 கோடி மோசடி; குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் ரூ.350 கோடி மோசடி செய்து விட்டதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏஜெண்டுகள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடந்தது. அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கூட்டத்தில், ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் செல்வராஜ், தர்மராஜ், சரவணன், ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் அளித்த புகார் மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தனியார் நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக இருந்து சுமார் 1½ லட்சம் பேரிடம் ரூ.350 கோடி வசூலித்து அந்த நிறுவனத்தில் செலுத்திஉள்ளோம்.
இந்த நிறுவனம் முதலீடு செய்தவர்களுக்கான அசல் மற்றும் லாப தொகையை வழங்காமல் மோசடி செய்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை வசூல் செய்து கொடுத்த ஏஜெண்டுகளான தங்களிடம் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பணத்தை திரும்பப்பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எட்டிவயல் கிராமத்தை சேர்ந்த மங்களசாமி மற்றும் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எட்டிவயல் ஊராட்சியில் உள்ள கிராம நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. ஆழ்துளை பம்பு, மோட்டார் ஆகியவை இப்பகுதியில் இயங்கவில்லை. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் வழியில் சிறிய பாலம் உடைந்து விட்டது. கிராம சுகாதார கழிப்பறை செயல்பாடின்றி கிடக்கிறது. பெரும்பாலான மின் கம்பங்கள் சேதமடைந்து விட்டன. கண்மாய் கரையில் உள்ள அடிபம்பு செயல்படாமல் உள்ளது. எனவே இந்த குறைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டுஉள்ளது.
மாவட்டத்தில் உள்ள இ–சேவை மையங்களில் பணியாற்றி வரும் ஏராளமான பணியாளர்கள் அளித்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் இ–சேவை மைய ஊழியர்கள் மற்றும் ஆதார் தரவு உள்ளீட்டாளர்கள் மற்றும் அரசு கேபிள் டி.வி. ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக முழுமையாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளமாக ரூ.8 ஆயிரம் வழங்கி வந்தநிலையில் தற்போது, ரூ.2 ஆயிரம் வழங்குகின்றனர். இதுபற்றி கேட்டபோது, பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் கைரேகை சரியாக பதியவில்லை என்று கூறுகின்றனர். மேலும் இன்டர்நெட் வசதி பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. இதனால் சேவைகளை முழுமையாக வழங்க முடியவில்லை. இதுபோன்ற காரணங்களை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த மாவட்ட மக்கள் தொடர்பாளர் அப்பாஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8–ம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 5 மாணவர்கள் தற்போது 10–ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை கிராமத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அபினா அளித்த மனுவில், தனக்கு ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் தர மறுத்து வருகின்றனர். இதனால் எனது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேதாளை நாடார் குடியிருப்பை சேர்ந்த செல்வராணி, மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் அளித்த மனுவில், வேதாளை பஸ் நிறுத்தத்திற்கு அருகே ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அங்கு மது விற்பனை செய்யப்படுவதால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.