மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு: குளிர்பானக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் மாமனார் உள்ளிட்ட 6 பேர் கைது


மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு: குளிர்பானக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் மாமனார் உள்ளிட்ட 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 9:08 PM GMT)

அம்மாப்பேட்டை அருகே குடும்ப தகராறில் குளிர்பானக்கடை உரிமையாளரை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மாமனார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாப்பேட்டை,

அம்மாப்பேட்டை கே.ஆர்.கே. தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சங்கர் (வயது35). இவர் அம்மாப்பேட்டை கடைவீதியில் குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரம்யா(25). இவர்களுக்கு 4½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

ரம்யாவின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் அவர் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆனைவிளந்தான்குளம் கிராமத்துக்கு சென்றார்.

அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் ரம்யா அவரது தந்தை ராஜேந்திரனிடம் அம்மாப்பேட்டையில் தனது கணவரிடம் வளர்ந்து வரும் மகளை அழைத்து வந்து தன்னிடம் சேர்க்குமாறு கேட்டார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று இரவு ராஜேந்திரன், அவரது மகன்கள் ரமேஷ்(29), சத்தியேந்திரன்(24) மற்றும் அவரது நண்பர்கள் வீரமணிகண்டன்(22), நாடிமுத்து(22), முகமது அசாருதீீன்(22) ஆகிய 6 பேரும் அம்மாப்பேட்டையில் உள்ள சங்கர் வீட்டுக்கு குழந்தையை அழைத்து வர சென்றனர்.

அப்போது சங்கர் வீட்டின் கதவை மூடி விட்டு குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். இதனால் குழந்தையை அழைத்துவர சென்றவர்கள் கதவை தட்டி சங்கரை அழைத்தனர். அப்போது சங்கர் கதவை திறக்காததால் ஆத்திரமடைந்த 6 பேரும் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் சங்கர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்்திரன் அவரது மகன்கள் ரமேஷ், சத்தியேந்திரன் மற்றும் வீரமணிகண்டன், நாடிமுத்து, முகமதுஅசாருதீன் ஆகிய 6 பேரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி எஸ்.ராஜசேகர் அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story