காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி கலால் துறை துணை ஆணையர் விக்ரந்த் ராஜாவுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மதுபாட்டில் கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கலால் துறை அதிகாரி பொய்யாதமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு காரைக்கால் பாரதியார் சாலையில் சந்தேகப்படும்படியாக சென்ற சரக்கு வாகனத்தை கலால்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது சாக்கு மூட்டைகளில் பல்வேறு வகை மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வாகனத்தில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திரு–பட்டினத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 42), பன்னீர் (47), அழகர் (37) என்பதும், காரைக்கால் நகர பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி, தமிழக பகுதிக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ராஜ்குமார் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.