மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பேராவூரணியில் நடந்தது


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பேராவூரணியில் நடந்தது
x
தினத்தந்தி 13 Dec 2018 10:45 PM GMT (Updated: 13 Dec 2018 9:35 PM GMT)

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேராவூரணியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்காத தமிழக அரசையும், பேரிடர் நிதி வழங்காத மத்திய அரசையும் கண்டித்தும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசும் போது கூறியதாவது:-

வெளியூர் கிராம நிர்வாக அலுவலர் புயல் சேதம் எடுத்த கணக்கை ஏற்க மறுத்து உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்கள் கையெழுத்திட மறுத்து வருகின்றனர். புயல் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் கூறும் கணக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. தென்னை மரத்துக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை போதாது.

முன்பு உள்ள கணக்கை வைத்து கொண்டு இப்போது அறிவித்துள்ள நிவாரண தொகையால் விவசாயிகளை காப்பாற்ற முடியாது. மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தென்னை விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாதிப்பை முழுமையாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். தென்னை பயிரிட விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்க வேண்டும். சேதமடைந்த நாட்டுப்படகு, விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நெல், வாழை, மா, பலா, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட அனைத்தையும் முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், தி.மு.க. மாநில மீனவரணி அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் பேராவூரணி அன்பழகன், நகரச்செயலாளர் தனம் நீலகண்டன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் காசிநாதன் மற்றும் திராவிடக்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story