பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சை அரசு மருத்துவமனையை ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகை


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சை அரசு மருத்துவமனையை ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Dec 2018 4:30 AM IST (Updated: 16 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சை அரசு மருத்துவமனையை ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பெண் ஊழியர்களுக்கு சிலர் பாலியல் தொல்லை அளிப்பதாக குற்றம்சாட்டினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சை மட்டுமின்றி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தூய்மை பணியை மேற்கொள்ள நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும் தனியார் நிறுவனத்தின் மூலம் 180-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெண் பணியாளர்களுக்கு உடை மாற்றும் அறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவக்கல்லூரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இரவு நேரங்களில் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் தொந்தரவு நடக்கிறது. தரக்குறைவாகவாக ஒப்பந்ததாரர்கள் பேசுவதுடன் தூங்க கூட விடாமல் பணியை செய்ய நிர்பந்தம் செய்வதாகவும் சிலர் மீது குற்றம்சாட்டினர்.

இவைகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஒப்பந்த பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டம் குறித்து ஒப்பந்த பணியாளர்கள் சிலர் கூறும்போது, இரவு நேரத்தில் சிலர் மது அருந்துவதுடன், பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். இதனால் பாதுகாப்புடன் பெண்கள் பணி புரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வதால் தான் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டுகின்றனர். நாங்கள் அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போராட்டத்தை காரணம் காட்டி பணியில் இருந்து எங்களை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றனர்.

Next Story