வாணியாங்குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


வாணியாங்குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 7:22 PM GMT)

கீழ்வேளூர் அருகே வாணியாங்குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த சோழவித்யாபுரம் கிராமத்தில் கீழத்தெரு உள்ளது. இந்த தெருவில் வாணியாங்குளம் என்ற குளம் உள்ளது. சோழவித்யாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிக்க மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் இந்த குளத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் வாணியாங்குளத்தில் ஆகாய தாமரைகள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. தற்போது ஆகாய தாமரைகள் புதர் போல் மண்டி கிடப்பதால், பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தின் படித்துறைகளும் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்த குளம் கோடைக்காலங்களில் உடனடியாக வற்றி விடுவதால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது இந்த குளம் சரிவர தூர்வாரப்படாமல் காணப் படுவதால், ஆகாயதாமரைகள் புதர் போல் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள், அருகில் உள்ள குளத்திற்கு சென்று குளித்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் மற்றும் செடி, கொடிகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

Next Story