9–வது நாளாக வேலைநிறுத்தம்: கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம்; சான்றிதழ் வழங்கும் பணி முற்றிலும் முடக்கம்
கிராம நிர்வாக அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டம் 9–வது நாளாக நேற்று நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திருப்பூரில் ஊர்வலமாக சென்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 9–வது நாளாக நேற்று நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் சுகாதார வளாகம், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கணினி மற்றும் இணையதள வசதி செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். இந்த பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விளக்க ஊர்வலம் தொடங்கியது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மண்டல செயலாளர் மாணிக்கவாசகம் ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.
ஊர்வலம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் முக்கிய நிர்வாகிகள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் கொடுத்து முறையிட்டனர். இந்த ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட 180–க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலைநிறுத்த போராட்டம் குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் சசிகுமார் கூறும்போது, கடந்த 16 நாட்களாக 18 வகையான சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது. 9–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. வருவாய்த்துறைக்கும், கிராம நிர்வாகத்துக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட அன்றாட நடப்புகள் கூட மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.