மதுரை டாக்டர் வீட்டில் கொள்ளை: மூளையாக செயல்பட்ட திருப்பூர் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண் மேலும் 3 பேர் கைது-ரூ.7 லட்சம் பறிமுதல்


மதுரை டாக்டர் வீட்டில் கொள்ளை: மூளையாக செயல்பட்ட திருப்பூர் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண் மேலும் 3 பேர் கைது-ரூ.7 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2018 5:00 AM IST (Updated: 21 Dec 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்ட திருப்பூர் போலீஸ்காரர் சரவணக்குமார் நேற்று மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர், கடந்த 6-ந் தேதி நடைபயிற்சி சென்றிருந்தபோது, அவரது வீட்டினுள் புகுந்த 6 பேர் கும்பல், அவரது மனைவி மீரா(62) மற்றும் வேலைக்கார பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது.

போலீஸ் விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த ராதாகிருஷ்ணன் (வயது 39) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மற்றும் கார், துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இதில் ராதாகிருஷ்ணன் போலீஸ்காரராக பணியாற்றியவர் என்பதும், தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரான குமார் மூலமாகத்தான், மதுரை கொள்ளையர்களுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள் கிடைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு தப்பி வந்த குமாரை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கொள்ளை சம்பவத்தில் போலீஸ்காரர்களுக்கு தொடர்பு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கொள்ளை தொடர்பாக மதுரையை சேர்ந்த ராஜபாண்டி, தமிழ்ச்செல்வன், திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் உள்பட மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மேலும் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்ட திருப்பூர் போலீஸ்காரர் சரவணன் என்ற சரவணக்குமார் மற்றும் 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சிலர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் டாக்டர் வீட்டின் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த வாடிப்பட்டி ஜெயம் நகரை சேர்ந்த செல்வம்(22), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சிவகுமார்(25), கருப்பாயூரணியை சேர்ந்த மணிராஜ்(22) ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த திருப்பூர் போலீஸ்காரர் சரவணக்குமார்(32) மதுரை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை இன்று (வெள்ளிக் கிழமை) மேலூர் கோர்ட்டில் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் சி.ஆர்.கவுதமன் உத்தரவிட்டார். அதுவரை மதுரை மத்திய சிறையில் அவரை அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சரணடைந்த சரவணக்குமார் தான், கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணக்குமாரின் சொந்த ஊர், மதுரையை அடுத்த பொதும்பு. அவர் தற்போது திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

நேற்று பிடிபட்ட செல்வமும், தலைமறைவாக உள்ள ஹரிவிக்னேசும் நண்பர்கள். எனவே செல்வம் தன்னுடைய காரை கொள்ளை சம்பவத்திற்கு அவர்களிடம் கொடுத்துள்ளார். அதன் மூலம் தான் அவர் பிடிபட்டுள்ளார்.

Next Story