விருத்தாசலத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்; டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு


விருத்தாசலத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்; டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் பிரதாப் ஜெய்(வயது 30). இவர் புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, பெங்களூருவை சேர்ந்த ரமா பிரியா(28) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு. இருவரும் பழகிவந்தனர். ரமா பிரியா ஏற்கனவே திருமணமானவர். ஒரு முறை பிரதாப் ஜெய், ‘ஐ மிஸ் யூ’ என்று ரமா பிரியாவிற்கு முகநூலில் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், ரமா பிரியாவை விவாகரத்து செய்துவிட்டார். இது குறித்து ரமா பிரியா, பிரதாப் ஜெய்யிடம் கூறியுள்ளார். அப்போது அவர், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதன்படி பிரதாப் ஜெய்யும், ரமா பிரியாவும் கடந்த 25.2.2018 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் விருத்தாசலத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர். திருமணம் ஆனதில் இருந்து ரமா பிரியாவுடன், பிரதாப் ஜெய் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. இதுபற்றி ரமாபிரியா கேட்டார். அதற்கு பிரதாப் ஜெய், தனக்கு உடலில் குறைபாடு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் குணமடைந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி ரமா பிரியா, சென்னையில் நடந்த தனது தம்பி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்களை பிரதாப் ஜெய், அவருடைய தந்தை ஜோதிலிங்கம், தாய் சிவக்கொழுந்து, சகோதரர் பிரசாந்த் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதை தட்டிக்கேட்ட ரமா பிரியாவை அவர்கள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் பிரதாப் ஜெய் உள்ளிட்ட 5 பேர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story