முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு


முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 2:48 PM GMT)

முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை, 

வாணாபுரம் மெய்யூர் காலனியை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கேஷ் (26), சுரேஷ் (22), பிரகாஷ் (23), ஏழுமலை (40), ராஜேஷ் (20), சகாதேவன் (39) ஆகியோருக்கும் இடையே பெண்ணை கேலி, கிண்டல் செய்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து உள்ளனர்.

இருப்பினும் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 24–ந் தேதி முன்விரோதம் காரணமாக இவர்கள் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த தங்கேஷ், சுரேஷ், பிரகாஷ், ஏழுமலை, ராஜேஷ், சகாதேவன் ஆகிய 6 பேரும் சேர்ந்து சந்திரபாபுவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் நடந்தது.

இதில் முன்விரோதம் காரணமாக சந்திரபாபுவை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக தங்கேஷ், சுரேஷ், பிரகாஷ், ஏழுமலை, ராஜேஷ், சகாதேவன் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் தங்கேஷ், சுரேஷ், பிரகாஷ் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 500–ம், ஏழுமலை, ராஜேஷ், சகாதேவன் ஆகியோருக்கு தலா ரூ.6 ஆயிரத்து 500–ம் அபராதம் விதித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.


Next Story