காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுடன் சந்திப்பு


காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 11:25 PM GMT (Updated: 25 Dec 2018 11:25 PM GMT)

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தின்போது மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையாவை நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது தங்களது மனக் குமுறலை வெளியிட்டனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. இதில் மந்திரிசபையில் இருந்து மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

புதிதாக 8 மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மந்திரி பதவியை பறித்ததால், ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் உள்ளார். மேலும் மந்திரி பதவியை எதிர்நோக்கிய எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, சுதாகர் உள்ளிட்டோரும் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது, கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் நேற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, சுதாகர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தங்களுக்கு மந்திரி பதவி வழங்காதது குறித்து மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

மந்திரிசபை மீண்டும் மாற்றி அமைக்கப்படும்போது, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் அவர்களை சித்தராமையா சமாதானப்படுத்தினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு ராமலிங்கரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

“எங்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினேன். எனக்கு பதவி வேண்டும் என்று அவரிடம் கூறவில்லை. அவருடன் நடந்த பேச்சுவார்த்தை எனக்கு திருப்தியை தந்துள்ளது. நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லவில்லை.

ராஜினாமா செய்ய மாட்டேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள். மத்தியில் காங்கிரசை சேர்ந்தவர் பிரதமராக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவோம்.

பா.ஜனதாவை சேர்ந்த விஸ்வநாத் எம்.எல்.ஏ., என்னை நேரில் சந்தித்து அவரது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார். இதில் வேறு எந்த விஷயமும் நாங்கள் பேசவில்லை. சதீஷ்ரெட்டி என்னை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் தவறானது. அவர் என்னை சந்திக்கவில்லை.”

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

சுதாகர் எம்.எல்.ஏ. கூறும்போது, “கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா உள்ளார். அவர் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராகவும் இருக்கிறார். அதன் அடிப்படையில் அவரை நேரில் சந்தித்து பேசினேன். எனது அதிருப்தியை அவரிடம் கூறினேன். ஆனால் நான் காங்கிரசைவிட்டு விலக மாட்டேன். நான் எப்போதும், சித்தராமையா, ராகுல் காந்தி அணியில் தான் உள்ளேன். பேச்சுவார்த்தை எனக்கு திருப்தி அளிக்கிறது” என்றார்.

இதற்கிடையே ராமலிங்கரெட்டியை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் பா.ஜனதாவை சேர்ந்த விஸ்வநாத் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எடியூரப்பா விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் ராமலிங்கரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மந்திரி பதவியை இழந்துள்ள ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரரான மந்திரி சதீஸ் ஜார்கிகோளி ஈடுபட்டுள்ளார். சித்தராமையாவை மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளவர்கள் பற்றியும், அவர்களை சமாதானப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி வருவதால், கூட்டணி அரசுக்கு இப்போதைக்கு எந்த சிக்கலும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

Next Story