ரூ.282 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


ரூ.282 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2019 11:00 PM GMT (Updated: 1 Jan 2019 4:34 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.282 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,


புதுக்கோட்டையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்த கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய ஒப்பந்தங்களை வழங்கி பேசினார். கூட்டத்தில் தொழில்துறை இணை இயக்குனர் மணிவண்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் திரிபுரசுந்தரி, முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக ரூ.250 கோடி தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை கடந்து ரூ.282 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க பல்வேறு தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்கும் வரை ஒற்றை சாளர முறையின் மூலம் துறை சார்ந்த அனுமதி பெறவும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சிட்கோ மூலம் நிலம் ஒதுக்கீடு பெறவும், நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கவும், புதிய மற்றும் தொழில் விரிவாக்கம் மேற்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.


தமிழக அரசு தமிழகத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 2015–ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அப்பல்லோ மருத்துவமனையுடன் மேற்கொள்ளப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை வருகிற 23–ந் தேதி துணை ஜனாதிபதி, முதல்–அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் உள்ளது என்றார்.

Next Story