கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து


கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 3 Jan 2019 4:30 AM IST (Updated: 2 Jan 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருவது வழக்கம். இங்கு கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. அதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் வசதி கருதி விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்வதற்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகிறது. இந்த படகுகளில் சென்று சுற்றுலா பயணிகள் மண்டபத்தை   ரசிப்பார்     கள். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். தற்போது கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களும் வருவதால் அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வந்தது.

படகு போக்குவரத்தில் செல்வதற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் கடல் சீற்றமாக இருந்ததால் காலை 10 மணிக்கு திடீரென படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிக்கு செல்ல முடியாமல் வெகுநேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே கடல் சீற்றம் குறைந்ததால் மதியம் 2.40 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து இயக்கப்பட்டது.

Next Story