கள்ளக்காதலியை என்னிடம் இருந்து பிரித்ததால் கிளி ஜோதிடரை கொன்றேன்; தனியார் நிறுவன ஊழியர் போலீசில் வாக்குமூலம்
கள்ளக்காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததால் கிளி ஜோதிடரை கொலை செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (வயது 35). இவர் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 24–ந் தேதி பென்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ரோட்டில் வைத்து பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து மர்ம ஆசாமியை தேடிவந்தனர். விசாரணையில், ரமேசை, நாகப்பட்டினம் அருகே குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகு(47) என்பவர் கொலை செய்ததும், இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ரகு, சென்னை அம்பத்தூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பின்னர் ரகுவை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1–ல் மாஜிஸ்திரேட்டு கவியரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் வடக்கு போலீசார் மனு செய்தனர். 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கவியரசன் அனுமதி அளித்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை ரகுவை திருப்பூர் வடக்கு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். ரகுவிடம் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்துராஜா விசாரணை நடத்தி வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில், ரகுவுக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதன்பிறகு ரகுவை விட்டு கள்ளக்காதலி பிரிந்து சென்று விட்டார். காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க ஜோதிடர் ரமேசை, ரகு தொடர்பு கொண்டுள்ளார். வசியம் செய்து சேர்த்து வைப்பதாக ரகுவிடம் ஜோதிடர் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதன்படி சேர்த்து வைக்கவில்லை. மேலும் அந்த பெண் இருக்கும் இடத்தை பற்றிய விவரத்தையும் தெரிவிக்காமல் ரகுவை ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்து கள்ளக்காதலியை பிரித்து விட்டு அவர் இருக்கும் இடத்தையும் கூறாத ஜோதிடர் ரமேசை கொலை செய்ய திட்டமிட்ட ரகு, சம்பவத்தன்று அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலத்தில் ரகு தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.
கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிள் இருக்கும் இடம் குறித்து போலீசார் ரகுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 நாட்கள் காவல் முடிந்த பிறகு நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை ரகுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர்.