சிறு, குறு தொழில்துறையினருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் விரைவில் ஆலோசனை சலுகைகள் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு


சிறு, குறு தொழில்துறையினருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் விரைவில் ஆலோசனை சலுகைகள் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:45 PM GMT (Updated: 4 Jan 2019 9:44 PM GMT)

சிறு, குறு தொழில்துறையினருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் சலுகைகள் கிடைக்குமா? என தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூரில் பின்னலாடை தொழில் செய்து வருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் கடன் பெற்றுத்தான் தொழில் செய்து வருகிறார்கள். இதன் பின்னர் பின்னலாடை தொழிலில் கிடைக்கும் லாபம் மூலமாக வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும்பாலும் வங்கி கடன் பெற்றே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது. இதனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு, சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் பின்னலாடை தொழில் சரிவை சந்தித்தது.

இதன் காரணமாக தொழில்துறையினர் வங்கிகளில் வாங்கிய கடன் தொகைகளை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், பலர் கடன்களை செலுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால் வங்கிகள் தொழில்துறையினரின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்தன.

மேலும், அவர்களுக்கு கடன் பெறும் தொகையின் அளவையும் உயர்த்தாமல் இருந்து வந்தன. இதனால் தொழில்துறையினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் தொகையை செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்ற சக்திகாந்த தாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.25 கோடி வரை தொழில்துறையினர் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை செலுத்தும் காலத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த கடன் காலத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விரைவில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தொழில்துறையினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:–

ரிசர்வ் வங்கி கவர்னரின் செயல்பாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரை உற்சாகப்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. கடன் காலம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சற்று நிம்மதியில் உள்ளோம். தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் எப்போது நடைபெறும் என காத்திருக்கிறோம்.

இந்த கூட்டத்தில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்துவதன் மூலம் தொழில்துறையினரின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க எளிதாக இருக்கும். இதன் மூலம் வங்கி கடன் உள்ளிட்டவைகளில் சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story