போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை; உரிமம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் வசூல்


போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை; உரிமம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் வசூல்
x
தினத்தந்தி 6 Jan 2019 9:45 PM GMT (Updated: 6 Jan 2019 7:44 PM GMT)

புதுவையில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முறையான உரிமம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் சில சுற்றுலா வாகனங்கள் முறையான உரிமம் இல்லாமல் வந்து செல்வதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில் உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர் ராவ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தர், ரவிசங்கர், முத்துராம் ஆகியோர் நேற்று காலை புதுவை எஸ்.வி. பட்டேல் சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த 75–க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. இதில் 6 வாகனங்கள் புதுவை மாநிலத்திற்குள் வருவதற்கான உரிமம் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாகனங்களுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை உடனடியாக வசூலித்து, வாகனங்களை விடுவித்தனர்.

இதனை தொடர்ந்து மி‌ஷன் வீதியில் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடும் நிலையங்களில் சோதனை நடத்தினர். அப்போது 2 நிறுவனங்கள் முறையாக அனுமதி பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது தெரியவந்தது. அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.13,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.


Next Story