அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆவின் பால் பூத் திறக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்


அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆவின் பால் பூத் திறக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆவின் பால் பூத் திறக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரில் காந்தி பூங்கா, திலகர் திடல் ஆகிய பகுதிகளில் ஆவின் பால் பூத் அமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் காந்தி பூங்கா பகுதியில் ஆவின் பால் பூத் அமைக்கக்கூடாது என்று தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பால்பூத் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. ஆனால் திலகர் திடலில் தொடர்ந்து ஆவின் பால்பூத் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பால் பூத்தை நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நில அளவைத்துறை அதிகாரிகள், சர்வேயர்கள் திலகர் திடலை முழுவதுமாக அளவீடு செய்தனர். மேலும் ஆவின் பால் பூத்தை பால் வளத்தலைவர் பழனியாண்டி திறந்து வைத்தார்.

இந்நிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பால் பூத் திறக்கப்பட்டு உள்ளதாக கூறியும், இதை கண்டித்தும் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே, தங்களுடைய துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் ஆவின் நிறுவனம் பால்பூத் திறந்து இருப்பதாகவும், அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமராஜன், புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மனுவை பெற்று கொண்ட போலீசார், மனு மீது விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். மேலும் திலகர் திடலில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story