ஊட்டி- ராக்லேண்ட் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை


ஊட்டி- ராக்லேண்ட் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 5:59 PM GMT)

ஊட்டி- ராக்லேண்ட் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பள்ளி மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக கொடுத்தனர். அதன்படி, ஊட்டி புதுமந்து செல்வ விநாயகர் காலனி பொதுமக்கள் பொதுக்கழிப்பிட வசதி கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

செல்வ விநாயகர் காலனி பகுதியில் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊட்டி நகராட்சி மூலம் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு சிலர் தங்களது வீடுகளில் கழிப்பிடம் கட்டி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி பொதுக்கழிப்பிடம் இடிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம், நவீன எந்திரம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

குடியிருப்பு பகுதியில் எந்திரம் வைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதன் அருகே மார்லிமந்து அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஊட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த குடிநீர் மாசுபடும் நிலையும் காணப்படுகிறது. அப்பகுதிக்கு நகராட்சி மூலம் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு, ஆண்டுகள் கடந்தும் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. காலனியின் மேல்புறத்தில் அரசு நிலம் இருக்கிறது. அந்த பகுதியில் எந்திரம் அமைத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எனவே, எங்களுக்கு அதே பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மஞ்சூர் அருகே கோரகுந்தாவை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோரகுந்தா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மஞ்சூர் அருகே ராக் லேண்ட் பகுதியில் அரசு உதவி பெறும் சாம்ராஜ் பள்ளியில் படித்து வருகின்றனர். அப்பர்பவானியில் இருந்து தினமும் காலை 6.45 மணியளவில் புறப்பட்டு கோரகுந்தாவுக்கு 7.15 மணிக்கு அரசு பஸ் ஒன்று வருகிறது. இந்த பஸ்சில் தான் பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்து பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். அதே பஸ் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு ராக் லேண்ட பகுதியை 4.30 மணிக்கு சென்றடைகிறது.

பள்ளி முடிந்து மாணவர்கள் அதே பஸ்சில் ஏறி வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் திடீரென அந்த அரசு பஸ்சை போக்குவரத்துக் கழகம் நிறுத்தி விட்டது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். மேலும் பள்ளிக்கு காலதாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாலை வீட்டுக்கு செல்ல 7 மணியாகிறது. வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரத்தில் வனவிலங்குகளால் மாணவர்களுக்கு ஆபத்து உள்ளது. ஆகவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட தாவணெ இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், இந்திரா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த 2004-ம் ஆண்டு கலெக்டர் சுப்ரியா சாகு தனி குடியிருப்புகளை ஏற்படுத்தினார். அதில் நாங்கள் தங்கி இருந்து வருகிறோம். தற்போது குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. எனவே, அவர்களுக்கு தனியாக வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 184 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் பந்தலூர் தாலுகா இரும்புபாலம் பகுதியில் பழங்குடியினரான பபிதா என்பவருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து கல்வி கட்டண நிதியுதவியாக ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, கூடலூர் தாலுகா நியூஹோப் பகுதியில் யானை தாக்கியதில் வீடு இழந்த ராஜம்மா என்பவருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து நிவாரண தொகை ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Next Story