அமைந்தகரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


அமைந்தகரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2019 9:30 PM GMT (Updated: 2019-01-08T00:32:15+05:30)

அமைந்தகரையில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காதலருடன் பூங்காவில் நின்று பேசுவதை பார்த்துவிட்ட தங்கை, அதை தந்தையிடம் சொல்வதாக கூறியதால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சவுமியா(வயது 19). இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுமியா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சவுமியா உடலில் எரிந்த தீயை அணைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சவுமியா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் தற்கொலை செய்து கொண்ட சவுமியா, ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று பூங்காவில் தனது காதலருடன் நின்று அவர் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை சவுமியாவின் தங்கை பார்த்துவிட்டு, தந்தையிடம் கூறப்போவதாக தெரிவித்தார்.

இதனால் பயந்துபோன சவுமியா, வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story