சிவகாசியில் பரிதாபம் வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்–2 மாணவர் சாவு


சிவகாசியில் பரிதாபம் வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்–2 மாணவர் சாவு
x
தினத்தந்தி 9 Jan 2019 12:00 AM GMT (Updated: 8 Jan 2019 10:33 PM GMT)

சிவகாசியில் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 மாணவர் ஒருவர் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர், சக்தி கணேஷ் (வயது 48). இவர் சிவகாசியில் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி அருணாதேவி. இவர்களுடைய மகள் அருள் கார்த்தீசுவரி (20), மகன் சதீஷ் (17).

அருள்கார்த்தீசுவரி சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷ் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.

மாணவர் சதீஷ் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றிருந்தார். வகுப்பறையில் இருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதனால் வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

உடனே ஆசிரியர்கள் வந்து பார்த்தனர். மாணவர் சதீசை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவரை டாக்டர் பரிசோதனை செய்த போது, சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இந்த தகவல் மாணவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறியபடி வந்தனர். இதற்கிடையே போலீசார் விரைந்து வந்து, மாணவர் சதீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக்கூடத்துக்கு சென்ற மகனை பிணமாக பார்த்து சதீசின் பெற்றோரும், உறவினர்களும் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதே போல் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் சதீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வகுப்பறையில் பிளஸ்–2 மாணவர் மயங்கி விழுந்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அந்த மாணவரின் குடும்பத்தினர், சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story