கவர்னரை முற்றுகையிட திட்டமிட்டதாக ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் 7 பேர் கைது


கவர்னரை முற்றுகையிட திட்டமிட்டதாக ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் 7 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 10:53 PM GMT)

கவர்னரை முற்றுகையிட திட்டமிட்டதாக ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி கடந்த 2017–ம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாக நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சிலரை போலீசார் கைது செய்தனர். அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வோம் என்று தெரிவித்தார்.

ஆனால் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றியது. அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அலங்காநல்லூர், செல்லூர், பெருங்குடி ஆகிய போலீஸ் நிலையங்களில் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் 134 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி முகிலன் உள்பட அவரது அமைப்பை சேர்ந்த ராஜூ, ஆரோக்கியமேரி, குமரன், கருப்பையா, காந்தி, சூசை ஆகியோர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் "நீங்கள் கவர்னரை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருக்கிறீர்கள். எனவே உங்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்கிறோம்" என்றனர். அதைத் தொடர்ந்து முகிலன் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.


Next Story