பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா


பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 8:49 PM GMT)

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், வடகாடு, மாங்காடு, நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வைத்து வண்ண கோலமிட்டு கரும்பு வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் பல பள்ளிகளில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய விழா பொங்கல் விழா. அறுவடை முடிந்து புத்தரிசியில் பொங்கல் வைக்கும் பழக்கம் பழங்காலம் தொடங்கி நடந்து வருகிறது. அவற்றை மறக்காமல் இன்னும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தான் பள்ளிகளிலும் பொங்கல் விழாக்களை கொண்டாடி வருகிறோம் என்றனர்.

அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் மத்தியில் சமத்துவம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் பானையில் பொங்கல் வைத்து, குலவை இட்டு விழாவை கொண்டாடினர். பின்னர் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பொங்கலை பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தனர். இதில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகள் வேட்டிசேலை அணிந்து வந்தனர்.

ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் திருவாசகம் முன்னிலை வகித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து துறை வாரியாக மாணவ-மாணவிகள் தனித்தனி பானைகளில் பொங்கலிட்டு கரகோஷத்துடன் அனைவருக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கும்மியாட்டம், தப்பாட்டம், குலவையிட்டு மகிழ்ந்தனர். முடிவில் சிவராமன் நன்றி கூறினார்.

திருவரங்குளம் அருகே வல்லாத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பானையில் பொங்கல் வைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பொங்கலோ, பொங்கல் என்று கூறி விழாவை கொண்டாடினார்.

குடுமியான்மலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக பேராசியர்கள் மற்றும் மாணவர்கள், பண்ணை தொழிலாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story