தானேயில் ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகன் மீட்பு
ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தானே,
தானே வாக்ளே எஸ்டேட் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேந்திரா. வக்கீல். இவரது மகன் கிரிஷ்(வயது8). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 13-ந்தேதி சிறுவன் கிரிஷ் திடீரென காணாமல் போய்விட்டான். இதனால் கலக்கம் அடைந்த யோகேந்திரா மற்றும் குடும்பத்தினர் சிறுவனை தேடி அலைந்தனர். ஆனால் சிறுவன் கிரிசை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் யோகேந்திராவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதில், எதிர் முனையில் பேசிய ஆசாமி, உனது மகனை கடத்தி வைத்து இருக்கிறேன். அவனை உயிரோடு ஒப்படைக்க வேண்டுமெனில் ரூ.3 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டினார். மேலும் பணத்தை அதே பகுதியில் டி.வி. மெக்கானிக்காக இருக்கும் கல்பத் சவுகான் என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த யோகேந்திரா இது குறித்து உடனே போலீசுக்கு தெரியப்படுத்தினார். அவர்கள் கொடுத்த யோசனையின்படி யோகேந்திரா ரூ.3 லட்சத்தை கல்பத் சவுகானின் வீட்டுக்கு சென்று அவரிடம் கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கியதும், கல்பத் சவுகான் ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்றார். இதைத்தொடர்ந்து அங்கு மறைந்து இருந்த போலீசார் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றனர்.
தானே மாஜிவாடாவில் இறங்கிய கல்பத் சவுகான் அங்கிருந்து வேறொரு ஆட்டோ மூலம் பிவண்டி நார்போலியில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்றார்.
உடனே போலீசார் அந்த குடிசை வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சிறுவன் கிரிசை மீட்டனர். மேலும் கல்பத் சவுகான் மற்றும் அந்த வீட்டில் இருந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்து, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுவன் கிரிஷ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில், கல்பத் சவுகான் தான் கிரிசை கடத்தி சிக்கந்தரின் வீட்டில் வைத்துவிட்டு யோகேந்திராவிடம் பணம் பறித்தது தெரியவந்தது.
சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டதாக கூறி, அவனை சில நாட்கள் தங்க வைத்து கொள்ளும்படிகல்பத் சவுகான்தன்னிடம் அவனை ஒப்படைத்ததாகவும், இந்த சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சிக்கந்தர் கூறினார்.
அவர் சொல்வது உண்மையா? அல்லது இந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க அவர் நாடகமாடுகிறாரா? என்பதை கண்டுபிடிக்க இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story