ஈரோட்டில் ஜல்லிக்கட்டு திருவிழா: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளம் காளையர்கள் பரிசாக தங்கக்காசு பெற்றனர்


ஈரோட்டில் ஜல்லிக்கட்டு திருவிழா: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளம் காளையர்கள் பரிசாக தங்கக்காசு பெற்றனர்
x
தினத்தந்தி 20 Jan 2019 12:00 AM GMT (Updated: 19 Jan 2019 3:33 PM GMT)

ஈரோட்டில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில் முரட்டுக்காளைகளை அடக்கிய இளம் காளையர்கள் பரிசாக தங்கக்காசுகள் பெற்றனர்.

ஈரோடு,

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு ஈரோட்டில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்த ஜல்லிக்கட்டு பேரவை முடிவு செய்தது. அதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன் ஈரோடு–பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் ஈரோடு ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது.

விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டது. 210 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட காளை தழுவும் இடம், வாடி வாசல், விழா மேடை, முக்கிய விருந்தினர்கள் மேடை என்று வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு காண வரும் பொதுமக்கள் வசதிக்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நேற்றுக்காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் வீரர்கள் பதிவு தொடங்கியது. அதுபோல் விளையாட்டை காணவும் ஆண்களும், பெண்களும், சிறுவர்–சிறுமிகளும் ஆர்வமாக விளையாட்டு மைதானத்தை நோக்கி வந்தனர்.

காலை 8 மணிக்கு ரசிகர்கள் கூட்டத்தால் மைதானம் நிரம்பியது. இதற்கிடையே மாடு பிடி வீரர்களுக்கு டோக்கன் எண்கள் வழங்கப்பட்டு மருத்துவ தகுதி பரிசோதனை நடந்தது. இதுபோல் மாடுகளும் பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. காலை 8.15 மணி அளவில் மைதானத்துக்கு கோவில் காளை கொண்டு வரப்பட்டது. கோவில் காளைக்கு மாலை அணிவித்து மைதானத்தை சுற்றி கொண்டு வந்தனர்.

இதற்கிடையே மத்திய கண்காணிப்பு குழு மற்றும் மத்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் மற்றும் அதிகாரிகள் மைதானத்துக்கு வந்தனர். அவர்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆகியோர் வரவேற்றனர். தேசிய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்டு மாடுகளின் பாதுகாப்பு, வீரர்களின் பாதுகாப்புக்கு செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார். காலை 8.30 மணிக்கு விழா மேடைக்கு தமிழக பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். அவர்கள் முன்னிலையில் கோவில் காளைக்கான பூஜை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாடு பிடி வீரர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உறுதிமொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் வாடி வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மத்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் கொடி அசைக்க வாடி வாசல் திறக்கப்பட்டது. முதலில் கோவில் காளை, அதைத்தொடர்ந்து 2 சாமி மாடுகள் அவிழ்த்து மைதானத்தில் விடப்பட்டன. அந்த மாடுகளை மாடு பிடி வீரர்கள் சிலர் தொட்டு வணங்கினார்கள். பின்னர் மாடுபிடி போட்டி தொடங்கியது. பார்வையாளர்களின் உற்சாக கரகோ‌ஷங்கள் மத்தியில் வாடி வாசலில் இருந்து முரட்டுக்காளைகள் சீறிப்பாய்ந்து வெளியேற தொடங்கின. காளைகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று இளங்காளையர்கள் காளைகளின் திமில்களை சுற்றி வளைத்து பிடித்து அடக்க முயன்றார்கள்.

காலை 8.40 மணி முதல் மதியம் 12.35 மணி வரை தொடர்ச்சியாக வாடி வாசலில் இருந்து காளைகள் வெளியே வர, மாடு பிடி வீரர்களும் சளைக்காமல் மாடுகளை விரட்டிப்பிடித்தனர்.

மாடுகளின் கொம்புகள், வால் ஆகியவற்றை வீரர்கள் பிடிக்கக்கூடாது. மாட்டின் மீது மண் வீசக்கூடாது. துன்புறுத்தவும் கூடாது. திமிலில் ஒருவர் மட்டுமே பிடித்து மாட்டை அடக்க வேண்டும். மாட்டை அடக்கும் வீரர், திமிலில் தொங்கிக்கொண்டே வெற்றிக்கோடு வரை செல்ல வேண்டும். அல்லது மாடு 3 சுற்றுகள் சுற்றும் வரை பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும். மாட்டை பிடிக்க முடியாமல் அது வெற்றிக்கோட்டை தொட்டு விட்டாலும், பிடித்தவரை வீசி விட்டு வெற்றிக்கோட்டுக்கு சென்று விட்டாலும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருவருக்கு மேல் மாட்டை பிடித்தால் மாடு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும். மாடு பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படாமல் அது செல்லாத மாடுபிடியாக அறிவிக்கப்படும் என்ற விதிமுறைகளுடன் வீரர்கள் களத்தில் நின்றனர்.

மதுரை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் 122 பேர் விளையாட்டில் கலந்து கொண்டனர். இதில் 12 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பதற்கு கம்பீரமாக தோன்றிய மாடுகளை வீரர்கள் அலேக்காக பிடித்து அடக்கியதும், சுள்ளான் போன்று இருந்த மாடுகள் அனைவரையும் ஏமாற்றி பிடிபடாமல் ஓடியதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. ஒவ்வொரு மாடாக வாடி வாசலில் இருந்து திறக்கும்போது அந்த மாட்டின் உரிமையாளரின் பெயர் மற்றும் பரிசு என்ன? என்ற விவரம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த மாடு வெளியேறும். அப்போது மாடு பிடி வீரர்கள் மாட்டை பிடித்து அடக்கினால் பரிசு வீரர்களுக்கும், பிடிக்கவில்லை என்றால் பரிசு மாட்டின் உரிமையாளருக்கும் உடனடியாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதுவரை செல்போன்கள், கிரைண்டர்கள், கைக்கடிகாரங்கள், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற 20 பேருக்கு கன்றுக்குட்டிகளும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

சில நேரங்களில் வெற்றிக்கோட்டை தாண்டி ஓடிய மாடுகள் அப்படியே வெளியேறாமல் மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்து வீரர்களை மிரட்டியே துரத்தின. அந்த மாடுகளை அடக்கக்கூடாது என்பதால் வீரர்கள் பாதுகாப்பாக கம்பி வேலிகளில் ஏறிக்கொண்டனர்.

ஒரு முறை வாடி வாசலில் இருந்து ஓடிய மாடு வெற்றிக்கோட்டை தாண்டி ஓடியது. அப்போது எதிரில் ஏற்கனவே வெளியே சென்ற மாடு திரும்பி வந்தது. அவை 2–ம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பார்வையாளர்கள் ஹோ... வென கூச்சலிட, மாட்டின் உரிமையாளர்கள் ஓடிச்சென்று மாடுகளை பிடித்துச்சென்றனர். இன்னொரு மாடு வெளியே சென்று விட்டு மீண்டும் மைதானத்துக்குள் மிகவும் சீற்றத்துடன் வந்தது. அது கண்ணில் கண்ட வீரர்கள் அனைவரையும் மோதுவதற்காக பாய்ந்தது. அவர்கள் லாவகமாக மாட்டின் தாக்குதலில் இருந்து தப்பினார்கள். மாட்டை பிடிக்க, அதன் வளர்ப்பு பணியாளர் ஒரு கயிறுடன் வந்தார். அவரை நோக்கி மாடு திரும்பியதும், அவர் கயிறு கம்பு அனைத்தையும் போட்டு விட்டு கம்பி வேலியில் ஏறி பதுங்கினார். பின்னர் மாடு மீண்டும் வாடி வாசலுக்கு ஓடியது. பலத்த போராட்டத்துக்கு பிறகு, மாட்டை கயிறுபோட்டு வெளியே இழுத்துச்சென்றனர். இன்னொரு முறை வெற்றிக்கோட்டை தாண்டிய 3 மாடுகள் வெளியே செல்லாமல் வாசல் அருகே நின்று கொண்டு இருந்தன. 4–வது மாடும் ஓடிச்சென்றது. சிறிது நேரத்தில் 4 மாடுகளும் ஒன்றாக சேர்ந்து மைதானத்துக்குள் வந்து வீரர்களை கலங்கடித்தது. இதுபோன்ற ருசிகர சம்பவங்களால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக ஜல்லிக்கட்டினை ரசித்தார்கள்.

நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 194 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 2 மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 192 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. இதில் 110 மாடுகள் பிடிபட்டன. அதிக பட்சமாக மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் 11 முரட்டுக்காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு பெற்றார். அவர் சிறப்பு பரிசாக ½ பவுன் தங்கம் பெற்றார்.

இதுபோல் கம்பீரமாகவும், யாருடைய பிடிக்கும் சிக்காமல் இருந்த உடுமலைப்பேட்டை காளையின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமார சின்னையன், சத்தியபாமா, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ. முருகேசன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுதுரை, விடியல் சேகர், முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு சுதா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர், ஏ.ஈ.டி. பள்ளி தாளாளர் காசியண்ணன், ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் சக்தி விக்னேஷ், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தனபாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உள்பட சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறந்த வீரராக தேர்வு பெற்ற கல்லூரி மாணவர்

ஈரோடு ஜல்லிக்கட்டு திருவிழாவில் 11 மாடுகளை அடக்கி சிறந்த வீரராக கார்த்திக் (வயது 19) தேர்வு பெற்றார். இவர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகனாவார். அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் கூறும்போது, 10 வயதில் இருந்தே மாடு பிடி விளையாட்டில் ஈடுபட்டு பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் கலந்து வருகிறேன். அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 6 மாடுகளை அடக்கினேன். இங்கு 11 மாடுகளை அடக்கி, தங்ககாசுகள், செல்போன்களை வென்று இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story