தனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலி


தனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 19 Jan 2019 9:45 PM GMT (Updated: 19 Jan 2019 3:54 PM GMT)

தனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள இளையனார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 46). இவர் பல்வேறு ஊர்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் நாராயணசாமி தனது மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது தேவபாண்டலத்தில் இருந்து மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் ஒன்று நாராயணசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நாராயணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சவுகத் அலி, இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். றனர். பின்னர் விபத்தில் பலியான நாராயணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜி(வயது 65). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை உளுந்தூர்பேட்டை பஸ் நிலைய பகுதியில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக வந்தார். அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ராஜி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த மேல்பட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முருகன்(வயது 35). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் சங்கர்(25) என்பவருடன் மேல்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story