ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் சந்திரபிரபா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்


ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் சந்திரபிரபா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 2:31 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு தண்ணீர் வினியோகம் குறித்து அறிவுரை வழங்கினார்.

 அப்போது அவர் பேசும் போது, குடிநீர் வழங்கக்கூடிய பகுதிகளை பொதுமக்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும். நகர் பகுதியில் அடிப்படை பணி செய்யக்கூடிய ஊழியர்களின் பெயர், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு 33 வார்டுகளிலும் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி காலை 4 மணிக்கு தண்ணீர் வினியோகத்தை தொடங்கி மாலைக்குள் முடிக்க வேண்டும். இரவு நேரங்களில் தண்ணீர் வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டும். இரவு நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்வது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எவ்விதத்திலும் குடிநீர் கிடைப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வு கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் முத்தையா, நகராட்சி ஆணையாளர் மாணிக்க அரசி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், மேலாளர் பாபு, தண்ணீர் விநியோகம் பார்வையாளர் அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story