ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்த 2 உதவி பேராசிரியர்கள் கைது
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்த 2 உதவி பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க நிரந்தர மற்றும் பகுதி நேர பேராசிரியர்கள் 50–க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இவர்களில் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதற்கிடையில் தாவரவியல் துறை உதவி பேராசிரியர்கள் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களது பி.எச்.டி. சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்.
இந்த சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவை போலியானது என்பது தெரியவந்தது. உடனே அந்த 2 உதவி பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.