இலங்கையில் இருந்து 9 படகுகளுடன் மீட்பு குழுவினர் ராமேசுவரம் வந்தனர்


இலங்கையில் இருந்து 9 படகுகளுடன் மீட்பு குழுவினர் ராமேசுவரம் வந்தனர்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 8:09 PM GMT)

இலங்கை சென்றிருந்த மீட்பு குழுவினர் 9 படகுகளுடன் நேற்று ராமேசுவரம் வந்தனர்.

ராமேசுவரம்,

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த படகுகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் தலைமையில் மீனவர்கள், தொழிலாளர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை சென்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், காரைநகர், கிராஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டி ருந்த தமிழக படகுகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 22 படகுகளை எடுத்து வருவதற்காக கடந்த 17-ந்தேதி 9 படகுகளில் 51 மீனவர்கள் கொண்ட மீட்பு குழுவினர் மீன்துறை அதிகாரிகள் தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றனர். இவர்கள் அங்கு சென்று பார்த்தபோது 9 விசைப்படகுகள் மற்றும் 2 நாட்டுப்படகுகள் மட்டுமே மீட்டுக்கொண்டு வரும் நிலையில் இருந்தன.

இதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு அந்த படகுகளை மட்டும் எடுத்துக்கொண்டு நேற்று ராமேசுவரம் வந்தனர். இவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து இந்திய எல்லையில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும்போது ஒவ்வொரு படகிலும் ஜி.பி.எஸ். கருவி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. ஆனால் அவர்கள் திரும்ப ஒப்படைக்கும்போது அந்த பொருட்கள் எதுவும் இல்லை. அவைகள் அனைத்தும் திருடுபோய்விட்டன. இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

Next Story