வேப்பந்தட்டை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணி தீவிரம் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை


வேப்பந்தட்டை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணி தீவிரம் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 23 Jan 2019 4:00 AM IST (Updated: 23 Jan 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர், கிணற்று நீர் பாசனத்தை கொண்டு விவசாயம் செய்து வருகிறார்கள். இதில் விவசாயிகள் பலர் பணப்பயிரான மரவள்ளி கிழங்கை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு பயிரிட்ட மரவள்ளி கிழங்கு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

சில இடங்களில் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அன்னமங்கலம், அரசலூர், தொண்டமாந்துறை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, பூலாம்பாடி போன்ற ஊர்களில் மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கை அறுவடை செய்த வயல்களில் கிடக்கும் மரவள்ளி இலைகளை மாடு வளர்க்கும் விவசாயிகள் அள்ளிச் சென்று தங்களது மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூட்டை (73 கிலோ) மரவள்ளி கிழங்கு ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விலை குறைந்து ஒரு மூட்டை மரவள்ளி கிழங்கு ரூ.350-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அன்னமங்கலத்தை சேர்ந்த விவசாயி வேளாங்கண்ணி கூறுகையில், ஆண்டு முழுவதும் நீர் இறைத்து பயிரிடக்கூடிய ஒரு வகையான பயிர் மரவள்ளி கிழங்கு. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்ல விலைக்கு விற்றது. தற்போது விலை குறைவாக உள்ளதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவைக் கூட பெற முடியாத நிலை உள்ளது. எனவே மரவள்ளி கிழங்கிற்கு கூடுதல் விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்றார். 

Next Story