காய்களை பழுக்க வைக்க வாழைத்தார்களில் ரசாயனம் அடிக்கப்படுகிறதா? செல்போன்களில் பரவும் வீடியோ படத்தால் பரபரப்பு
ஈரோட்டில் வாழை காய்களை பழுக்க வைக்க வாழைத்தார்களில் ரசாயனம் அடிப்பதாக செல்போன்களில் பரவும் வீடியோ படத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி காய்கறி மற்றும் பழ மார்க்கெட் உள்ளது. இங்கு கிருஷ்ணா தியேட்டர் அருகே வாழைத்தார் சந்தை செயல்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் நாமக்கல்லில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோடு மார்க்கெட்டில் இருந்து விற்பனை செய்யப்படும் வாழைத்தார்களில் காய்களை பழுக்க வைக்க ரசாயனம் அடிப்பதுபோன்ற வீடியோ படம் செல்போன்களில் பரவி வருகிறது. வாலிபர் ஒருவர் ரசாயன மருந்து அடிக்கும் ‘பம்பு’ ஒன்றை வைத்து வாழைத்தார்களில் மேலிருந்து கீழ்வரை ரசாயன மருந்தை அடிக்கிறார். பின்னர் அந்த தார் தனியாக வைக்கப்படுகிறது. பச்சையாக இருக்கும் காய்கள் ரசாயனம் அடிக்கப்பட்டதும் நிறம்மாற தொடங்குகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:–
ஈரோடு மார்க்கெட்டில் இருந்து ஏராளமானவர்கள் தினமும் வாழைத்தார்கள் வாங்கிச்செல்கிறார்கள். குறிப்பாக தள்ளுவண்டி வியாபாரிகள் அதிக அளவில் இங்கிருந்து பழங்கள் வாங்கிச்சென்று விற்கிறார்கள். பொதுவாக பெரிய பழக்கடைகளில் இருக்கும் பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக வரும் தகவல்களால் அச்சமுறும் பொதுமக்கள் தள்ளுவண்டி கடைகள், திறந்த வெளி சந்தைகளில் இருந்து பழங்கள் வாங்கிச்செல்கிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதுபோன்று வாழைத்தார்களில் ரசாயனம் அடிக்கும் காட்சி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாங்காய்களில் ரசாயனக்கல் வைத்து பழுக்க வைப்பதுபோல இதுவும் மிக மோசமானதாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாழைத்தார் சந்தையில் ஆய்வு செய்து, இதுபோன்ற மக்கள் நலத்துக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழைத்தார்களில் ரசாயனம் கலப்பு என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகும். உடனடியாக இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.