சென்னிமலையில் பிளாஸ்டிக் கதவு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரம்– பொருட்கள் எரிந்து நாசம்


சென்னிமலையில் பிளாஸ்டிக் கதவு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரம்– பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் பிளாஸ்டிக் கதவு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மேலப்பாளையம் கண்ணகி வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 50). தொழில் அதிபர். இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கதவு தயாரிக்கும் தொழிற்சாலை, வீட்டின் அருகிலேயே உள்ளது. மேலும் அதன் அருகிலேயே கதவுகளில் பிரிண்டிங் அடிக்கும் எந்திரம் மற்றும் கதவுகளை சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. இந்த தொழிற்சாலையில் 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று தொழிலாளர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். மாலை 4 மணி அளவில் பிரிண்டிங் அடிக்கும் எந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென பரவி அங்கிருந்த பொருட்கள் மீது பற்றி எரிந்தது. பிளாஸ்டிக் பொருட்களாக இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் இதுபற்றி சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கரும்புகை அதிகமாக வந்ததால் தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையின் முன்புறமாக சென்று தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு தொழிற்சாலையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்காலான தடுப்பு சுவரை இடித்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் தீயை அவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி வேல்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்னிமலைக்கு விரைந்து சென்றனர். 2 தீயணைப்பு வண்டிகளில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதற்கிடையே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சென்னிமலை பகுதியில் இருந்து 5 குடிநீர் லாரிகளில் தண்ணீர் அந்த தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த லாரிகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் மாலை 6 மணி அளவில் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

தொழிற்சாலை உள்ள இடத்தில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் சென்னிமலை முருகன் கோவில் தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு கூடியிருந்தனர். தொழிற்சாலையில் இருந்து கரும்புகை எழும்பியதை கண்டதும் பக்தர்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்க்க அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு ஏராளமானோர் கூடினர். உடனே வேடிக்கை பார்த்தவர்களை சென்னிமலை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘எந்திரம் இயங்கி கொண்டிருந்தபோது மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம்,’ என தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரம், பிளாஸ்டிக் கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story