மக்காசோள பயிர் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கலெக்டரிடம் மனு
விருதுநகர் மாவட்டத்தில் அமெரிக்க படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காசோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
விருதுநகர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
அமெரிக்க படைப் புழுவால் மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளப் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் பெரும் நஷ்டத்தை தாங்க வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஏக்கருக்கு ரூ.13,500 இழப்பீடு என்பது போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய மக்காசோள விதை வழங்கிய நிறுவனத்தின்மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயமுருகன், செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.