திருபுவனையில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் பலி


திருபுவனையில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 23 Jan 2019 5:34 AM IST (Updated: 23 Jan 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானர்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை அருகே உள்ளது மண்டகப்பட்டு கிராமம். இது தமிழக பகுதியாகும். இந்த கிராமத்தை சேர்ந்த ஜனகன் என்பவரது மகன் ஜெயவர்தன்(வயது19). இவரது நண்பர்கள் விஜய்(20) திருமுருகன்(24). இவர்கள் இங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.நேற்று காலையில் இவர்கள் 3 பேரும் ஒருமோட்டார் சைக்கிளில் புதுவை சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை அருகே அவர்கள் வந்த போது எதிரில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி மின்னல் வேகத்தில் வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஜெயவர்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படுகாயம் அடைந்த விஜய், திருமுருகன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் உயிர் இழந்தார். திருமுருகன் மிகவும் ஆபத்தான நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story