மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் 2,989 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2,989 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 11 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடக்க இருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு திரண்டனர்.
மறியல் போராட்டத்தையொட்டி போலீஸ் உதவி கமிஷனர்கள் ஈஸ்வரன், ராஜகாளஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் நித்தியானந்தம் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலைக்கு வந்தனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர். இவர்களை தடுக்கும் வகையில் போலீசார் சாலையில் வரிசையாக தடுப்பு கம்பிகள் வைத்தனர். அதையும் மீறி அவர்கள் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் பலர் பெரியார் மேம்பாலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்ய தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் வாகனம் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 390 பெண்கள் உள்பட 580 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் நித்தியானந்தம் கூறும் போது, ‘எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். மேலும் அரசின் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம். ஆகையால் எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.
இதேபோல் மேட்டூர் தாலுகா அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மேட்டூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்கராயன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 375 பேர் கைது செய்யப்பட்டனர். எடப்பாடி தாலுகா அலுவலகம் அருகே ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பின்னர் மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடந்தது. காடையாம்பட்டியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சேகர் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது செய்யப்பட்டனர். ஓமலூரில் 360 பேர் கைது செய்யப்பட்டனர்.
கெங்கவல்லி அண்ணா சிலை முன்பு கருப்பு துணியை வாயில் கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சாலை மறியல் நடத்தினர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சங்ககிரியில் வட்ட ஒருங்கிணைப்பாளர் பசுபதி தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பஸ் நிலையம் சென்று ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் செய்தனர். அதில் 249 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களிலும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 2,989 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் 2-வது நாளாக அரசு அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டம் காரணமாக பல்வேறு அரசு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியுற்றனர்.
Related Tags :
Next Story