மடத்துக்குளம் அருகே 3–வது நாளாக முகாம்: சின்னதம்பி யானையை வனத்துக்குள் திருப்பி அனுப்ப அதிகாரிகள் ஆலோசனை


மடத்துக்குளம் அருகே 3–வது நாளாக முகாம்: சின்னதம்பி யானையை வனத்துக்குள் திருப்பி அனுப்ப அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 4 Feb 2019 10:15 PM GMT (Updated: 4 Feb 2019 9:13 PM GMT)

மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் 3–வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை வனத்துக்குள் திருப்பி அனுப்ப அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மடத்துக்குளம்,

கோவை மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வசித்து வருகின்றன. அவற்றில் ஒரு சில யானைகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களில் புகுவதும், அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை நாசம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தன. அந்த யானைகளை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த விநாயகன் மற்றும் சின்னதம்பி ஆகிய 2 யானைகள் கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. அவற்றில் விநாயகன் யானையை வனத்துறையின் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். சின்னதம்பி யானையை பிடித்து பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் அடுத்த வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். சின்னதம்பி யானையை கண்காணிப்பதற்காக ரேடியோ காலருடன் கூடிய ஜி.பி.எஸ் கருவி அதன் கழுத்து பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவியின் உதவியுடன் வனத்துறையினர் சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 31–ந்தேதி இரவு டாப்சிலிப் பகுதியில் இருந்து வெளியேறிய சின்னதம்பி யானை, பொள்ளாச்சி பகுதியில் சுற்றி திரிந்து விட்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே புதர் பகுதியில் புகுந்தது. இதையடுத்து சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் இருந்து கும்கி யானை கலீம் வரவழைக்கப்பட்டது.

அதன்பின்னர் கலீம் யானையை வனத்துறையினர் சின்னதம்பி யானை முகாமிட்டிருந்த பகுதிக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை புதர் பகுதியிலேயே சின்னதம்பி யானை நின்றது. எனவே அதை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை. இந்த நிலையில் கும்கி கலீமுக்கு உதவியாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து கும்கி மாரியப்பன் யானை வரவழைக்கப்பட்டது. இதையடுத்து சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கிகள் தயார் நிலையில் உள்ளன.

நேற்றும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை அதே இடத்தில் சின்னதம்பி யானை இருந்து வந்தது. பின்னர் சின்னதம்பி யானை, அந்த இடத்தை விட்டு வெளியே வந்தது. அந்த பகுதியில் தோட்டத்தில் இருந்த கரும்புகளை மேய்ந்துவிட்டு தண்ணீர் குடித்து விட்டு, மக்காச்சோளம் தின்பதற்காக சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளேயே அது சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள வன அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். மேற்கொண்டு வனத்திற்குள் சின்னதம்பியை கொண்டு போய் விடுவதா, அல்லது விரட்டி விடுவதா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதி உள்ளதால், சின்னதம்பியை லாரியில் ஏற்றிக்கொண்டு போய் விடுவதே உகந்ததாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். தற்போது மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து இருக்கின்றனர். உத்தரவை பெற்ற பிறகு சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் உதவிக்கு 2 கும்கி யானைகளை பயன்படுத்தவும் உள்ளனர். சின்னதம்பி யானையின் மன நிலை நிமிடத்திற்கு நிமிடம், மாறி வருவதால், யானை பற்றி முடிவு எடுப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சின்னதம்பி யானையின் அடுத்த நடவடிக்கைகளை பொறுத்தே மீண்டும் அதனை மேற்கொண்டு என்ன செய்வது என முடிவு செய்யப்படும் என்று வனத்துறையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு கும்கி யானைகள் கலீமும், மாரியப்பன் உதவியுடன் சின்னதம்பி யானையை வனப்பகுதியில் கொண்டு விட வண்டியில் ஏற்றிச்செல்லப்பட்டது. இதனால் கும்கிகளின் வாசனை அறிந்த சின்னதம்பி யானை பயந்து அவைகள் இருக்கும் பக்கமே வராது என பேசப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளை உடைத்தெரியும் வகையில் நேற்று முன்தினம் கும்கி யானை கலீம் இருக்கும் இடத்திற்கே சென்ற சின்னதம்பி தும்பிக்கையால் தடவி சினேகமாகியது.

நேற்று கும்கி கலீமிடம் லேசான பலப்பரீட்சை செய்து பார்க்க தொடங்கியது. கரும்பு காட்டிற்குள் செல்வதும் பின்பு வந்து கலீமுடன் தந்தங்களை உரசி பதிலுக்கு கலீமும் முட்டி நகர்த்தியது. தானே வலிமையானவன் என நிரூபிக்க கலீம் மோதிதள்ள அங்கிருந்து செல்லும் சின்னதம்பி மீண்டும் வந்து பலப்பரீட்சை செய்து பார்ப்பதுமாய் இருந்தது. கலீமுடன் சின்னதம்பி பலப்பரீட்சையில் ஈடுபட வந்தாலும் பாகன்கள் கலீமிடம் கட்டளைகளை பிறப்பித்து கட்டுப்படுத்தி சின்னதம்பியை அதன் போக்கில் விட்டனர். தன்னை கட்டுப்படுத்த வந்த கலீமுடனே பலப்பரீட்சை செய்து பார்க்க நினைக்கும் சின்னதம்பியை பார்த்து வனத்துறையினர் வியந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்னதம்பி யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டு உள்ளதால் மீண்டும் மயக்க ஊசி போடுவதற்கான வாய்ப்பு இல்லை. அதையும் மீறி மயக்க ஊசி செலுத்திய பின்பு யானை தண்ணீர் குடித்தால் இறந்து விடும் என்ற தகவலும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை சின்னதம்பி யானையை பிடிப்பதற்கான கால நேரங்கள் முடிவடைந்துவிட்டன. இனி மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சின்னதம்பி யானையின் மனநிலைகளை பொறுத்து முடிவு செய்யப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story