தாராபுரத்தில், தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் புகார்


தாராபுரத்தில், தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:04 PM GMT (Updated: 7 Feb 2019 10:04 PM GMT)

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்து விட்டதாக குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

தாராபுரம், 

தாராபுரம் அலங்கியம் ரோட்டில் வசிப்பவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி தனது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு தடுப்பூசி போடுவதற்காக, பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சுமார் காலை 11 மணிக்கு குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். நேற்று மதியம் காலை 10 மணிக்கு குழந்தை மயக்க நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து விஜயலட்சுமி தனது உறவினர்களின் உதவியோடு குழந்தையை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தாராபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர்கள், குழந்தையை பரிசோதிக்காமல், தடுப்பூசி போட்டதால் தான், குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் புகார் தெரிவித்தார்கள். அதன்பின்னர் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்படி புதைத்துவிட்டார்கள்.

பெற்றோரின் இந்த புகாரையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். தேன்மொழி மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்கள், விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தடுப்பூசி போட்டதால் குழந்தை இறக்கவில்லை. சந்தேகம் இருந்தால் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தால்தான், உண்மையான காரணத்தை கண்டறிய முடியும் என்று கூறி பெற்றோரையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தினார். அதையடுத்து குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் சமாதானம் அடைந்தனர். தடுப்பு ஊசி போட்ட குழந்தை 24 மணி நேரத்தில் இறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Next Story