தலை துண்டித்த நிலையில் தண்டவாளத்தில் என்ஜினீயரிங் மாணவர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை


தலை துண்டித்த நிலையில் தண்டவாளத்தில் என்ஜினீயரிங் மாணவர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே தலை துண்டித்த நிலையில் என்ஜினீயரிங் மாணவர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாழப்பாடி, 

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகன்கள் குகன்ராஜ் (வயது 19), சவுந்திராஜ் (17). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குகன்ராஜ், பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சவுந்திராஜ் பழனியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற குகன்ராஜ் மாலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது மாலை 6 மணிக்கு குகன்ராஜ் வாழப்பாடிக்கு பஸ்சில் வந்து இறங்கியது தெரியவந்தது. இதனால் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனாலும் குகன்ராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு வாழப்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று காலை வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் மூடிக்கிடக்கும் தனியார் பால்பண்ணை நிறுவனத்துக்கு பின்புறத்தில் சேலம்-விருத்தாச்சலம் அகல ரெயில்பாதையில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கல்லூரி புத்தகப்பையுடன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வாழப்பாடி போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த குகன்ராஜின் பெற்றோர், தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தங்களது மகன் என்பதை அறிந்து, கதறி அழுதனர். தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்டு கல்லூரி மாணவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததால், அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தலையை துண்டித்து கொலை செய்து விட்டு, தண்டவாளத்தில் போட்டுச்சென்றனரா? என வாழப்பாடி போலீசார், சேலம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story