மடத்துக்குளம் அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை கும்கிகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம் வனத்துறையினர் நடவடிக்கை


மடத்துக்குளம் அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை கும்கிகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம் வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2019 3:51 AM IST (Updated: 10 Feb 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கண்ணாடிபுத்தூர் பகுதியில் சின்னதம்பி யானை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முகாமிட்டு சுற்றி வருகிறது. இதை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் சின்னதம்பி யானை அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை உள்ளிட்டவற்றை சேத சேதப்படுத்தி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் விளை நிலங்களை சேதப்படுத்திய சின்னதம்பி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதிக்கு கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னதம்பி யானை அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணாபுரம் ரெயில்வேகேட், கணேசபுரம், மடத்துக்குளம் ரெயில்வேகேட், மடத்துக்குளம் ரெயில் நிலையம் ஆகியவற்றை கடந்து, மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பகுதியின் ஓரத்திற்கு வந்தது. பின்னர் அருகில் உள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் தஞ்சமடைந்தது. இதன் காரணமாக அங்கேயே தங்கி அருகில் உள்ள வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களை சுவைத்ததுடன், பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.

இதன் காரணமாக அமராவதி ஆற்றுப்பகுதியை நோக்கி, சின்னதம்பி யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை அங்குள்ள கரும்புதோட்டத்திலேயே சின்னதம்பி யானை தங்கி ஓய்வெடுத்தது. அதன் பின்னர் வெளியே வந்த சின்னதம்பி யானையை விரட்ட வனத்துறை காவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக பட்டாசுகளை வெடித்தும், அருகே சென்று அதிபயங்கரமாக கூச்சலிட்டும், கரும்புகளை காட்டி வழித்தடங்களுக்கு அழைத்தும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது. இரவில் மீண்டும் அங்கேயே தங்கி இருந்தது.

இந்த நிலையில் தற்போது கண்ணாடிபுத்தூர் விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எங்களது விவசாய நிலங்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. மேலும் தோட்டத்து பகுதிக்குள் அமைந்துள்ள எங்களது குடி இருப்புகளையும், எங்களையும் அச்சுறுத்தி வருகின்றது. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள சின்னதம்பி யானையை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மீண்டும் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கும்கி யானை யானைகளான கலீம், மாரியப்பன் ஆகியவற்றை நேற்று காலை 8 மணிக்கு, கண்ணாடிபுத்தூர் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்கி யானைகளின் துணையுடன், சின்னதம்பி யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனர்.

ஆனால் கும்கி யானைகள் சின்னதம்பி யானையை மிரட்டி பார்த்தது. ஆனால் சிறிதும் தளராத சின்னதம்பி யானை சுதாரித்துக்கொண்டு, மீண்டும் கரும்பு காட்டிற்குள் சென்று தங்கிவிட்டது. நேற்று காலை 11 மணியளவில் கரும்பு தோட்டத்திற்கு சென்ற சின்னதம்பி யானை வெளியே வரவில்லை. சின்னதம்பி யானை வெளியே வரும் என எதிர்பார்ப்புடன் 2 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் மற்றும் போலீசார் தோட்டத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மாவட்ட வன அலுவலர் திலீப், பழனி வனச்சரகர் கணேஷ்ராம், திருப்பூர் பெண் வனச்சரகர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் சின்னதம்பி யானை கரும்பு காட்டிற்குள் இருந்து வெளியே வந்தது. அதனை 2 கும்கி யானைகளும் விரட்டியதில் மீண்டும் கரும்பு காட்டிற்குள்ளேயே சின்னதம்பி யானை சென்றது.

எனவே சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு மேல் இருள் சூழத்தொடங்கியதால் சின்னதம்பி யானையை விரட்டும் முயற்சியை வனத்துறையினர் கைவிட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வனப்பகுதிக்குள் சின்னதம்பியை விரட்ட முடிவு செய்துள்ளனர்.


Next Story