புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை


புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 11:30 PM GMT (Updated: 9 Feb 2019 11:23 PM GMT)

புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் புதிய வரிகள் எதையும் விதிக்காமல் அருமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் புதுவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. கவர்னர், முதல்–அமைச்சர் இடையேயான மோதல்போக்கின் காரணமாக கடந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இன்னும் முடித்து வைக்கப்படாமல் உள்ளது.

சட்டசபை விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இடைக்கால பட்ஜெட் போடாமல் முழு பட்ஜெட்டையும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் சட்டசபையின் மாண்புகளை சீர்குலைக்கக்கூடாது.

எத்தனையோ கட்சிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி அ.தி.மு.க.வோடு கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். அவரது கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்று அவரது எண்ணத்தை கூறியுள்ளார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.

எங்கள் கட்சி தலைமை என்ன முடிவு செய்தாலும் அதை புதுவை அ.தி.மு.க. ஏற்கும். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எங்கள் தலைமை நல்ல முடிவினையே எடுக்கும். எங்கள் கட்சியின் கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று அவரது கருத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரையே தமிழக மக்களுக்காக முடக்கி வரலாறு படைத்துள்ளனர். புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி என்ன செய்துவிட்டோம் என்று ஓட்டு கேட்கும்?

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story