திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது 3 கிராம விவசாயிகள் மனு


திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது 3 கிராம விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:45 AM IST (Updated: 12 Feb 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று 3 கிராம விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி, 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, கீழ கல்கண்டார்கோட்டை ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எங்களுக்கு சொந்தமான விவசாய விளை நிலங்களை திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக எடுக்கக்கூடாது என்று மீண்டும் ஒரு முறை எங்களது ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது மூதாதையர் விட்டுச்சென்ற அசையா சொத்தான இந்த நிலங்கள் தான் எங்களது வாழ்வாதாரம் ஆகும். மழைக்காலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மழைநீர் பெரு வெள்ளமாக வந்தபோது கிழக்குறிச்சி கிராமம் தான் வடிகாலாக அமைந்தது. இங்கு விமான நிலைய ஓடுபாதைக்காக உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்காக பாலம் கட்டினால் தண்ணீர் திருவெறும்பூர் மற்றும் பாய்லர் ஆலை பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே விமான நிலைய விரிவாக்கத்துக்காக விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

திருச்சி மாநகராட்சி 38-வது வார்டு கவிபாரதி நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களுக்கு பதிலாக வேறு மின்கம்பங்கள் நடவேண்டும், அங்கன்வாடி மையத்திற்கு கான்கிரீட் கட்டிடம் கட்டித்தர வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், விளையாட்டு திடல் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தில் கவிபாரதி நகரை சேர்க்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

எடமலைப்பட்டிபுதூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை பஞ்சப்பூர் பகுதியில் அமைக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது. திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எமிலி ரிச்சர்டு தொழுநோயாளிகளுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.

பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 250 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கூடுதல் கட்டிட பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். குழந்தைகளுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும், என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் கொடுத்தனர். முசிறியில் மணல் குவாரி அமைக்க அனுமதி தரவேண்டும். இல்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய மனுவை மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொடுத்தனர். தொட்டியம் தாலுகா மாவளிப்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர். 

Next Story