பவானிசாகர் அருகே பஸ்சை 3 யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு


பவானிசாகர் அருகே பஸ்சை 3 யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:15 AM IST (Updated: 12 Feb 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே ரோட்டில் சென்ற பஸ்சை 3 யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமம் தெங்குமரஹடா. இந்த கிராமத்துக்கு பவானிசாகரில் இருந்து காராச்சிக்கொரை வழியாக அடர்ந்த வனப்பகுதியில் 25 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இந்த கிராமத்துக்கு 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அரசு பஸ் ஒன்று பவானிசாகரில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ் காராச்சிக்கொரை வன சோதனை சாவடியை கடந்து அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டின் நடுவில் 3 யானைகள் நின்று கொண்டிருந்தன.

யானைகளை கண்டதும் டிரைவர் அப்படியே பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென அந்த 3 யானைகளும் பிளிறியபடி பஸ்சை நோக்கி ஓடிவந்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். ஆனாலும் அந்த 3 யானைகளும் பஸ்சை வழிமறித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தன. பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும் பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து தெங்குமரஹடாவுக்கு சென்றது. நடுரோட்டில் பஸ்சை யானைகள் வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். ரோட்டை கடக்கும் வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக்கூடாது. இரவு நேரங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் யாரும் வனப்பகுதி ரோட்டில் செல்ல வேண்டாம்,’ என அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story