மடத்துக்குளம் அருகே 6 ஏக்கர் கரும்புகளை சேதப்படுத்திய சின்னதம்பி யானை 12 தென்னை மரங்களையும் பிடுங்கி எறிந்தது


மடத்துக்குளம் அருகே 6 ஏக்கர் கரும்புகளை சேதப்படுத்திய சின்னதம்பி யானை 12 தென்னை மரங்களையும் பிடுங்கி எறிந்தது
x
தினத்தந்தி 12 Feb 2019 3:45 AM IST (Updated: 12 Feb 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே 12 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த சின்னதம்பி யானை, மேலும் அங்குள்ள 6 ஏக்கர் கரும்பு தோட்டத்தையும் சேதப்படுத்தியது.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சின்னதம்பி யானை சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணாடிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த சின்னதம்பி யானை அங்கிருந்த 12 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. அது மட்டுமின்றி அருகே உள்ள சேதுராமன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த சின்னதம்பி யானை அங்கிருந்த கரும்புகளை பிடுங்கி தின்றது. கரும்பு தோட்டத்துக்குள் அங்கும், இங்கும் சுற்றி திரிந்ததால் ஏராளமான கரும்புகள் சேதம் அடைந்தன.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு தோட்டத்தை அது சேதப்படுத்தி விட்டது. நடராஜன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த சின்னதம்பி யானை சுமார் 2½ ஏக்கர் கரும்புகளையும் சேதப்படுத்தி விட்டது. செந்தில் என்பவரது ஒரு ஏக்கர் வாழைத்தோட்டத்தையும், சுப்பிரமணியம் 2½ ஏக்கர் கரும்பு தோட்டத்தையும் சின்னதம்பி யானை சேதப்படுத்தியது. சின்னதம்பி யானை விவசாய விளைபொருட்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். சின்னதம்பி யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும் கண்ணாடிப்புத்தூர் பகுதியிலேயே சின்னதம்பி யானை சுற்றி வந்தது. வனத்துறையினரும் அந்த யானையை கண்காணித்து வந்தனர். மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சின்னதம்பி யானையை பார்க்க திரண்டனர். அவர்கள் இருசக்கர வாகனங்களை அங்குள்ள மடத்துக்குளம்–குமரலிங்கம் சாலையில் ஓரமாக நிறுத்தி இருந்தனர்.

சின்னதம்பி யானையை பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியே ஒரு திடீர் சுற்றுலாவாக மாறி விட்டது. மேலும் தர்ப்பூசணி, ஐஸ்கிரீம், அன்னாசி பழக்கடைகள் என திடீர் தற்காலிக கடைகளும் அங்கு முளைத்து விட்டது. இதனால் சின்னதம்பி யானையை பார்க்க வந்த பொதுமக்கள் ஐஸ்கிரிம், தர்ப்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, சின்னதம்பி யானை தனது வாழ்விடத்தை தேடி அலைந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதிலேயே அது முகாமிட்டு கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து அது மிரள்கிறது. தற்போது அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆதலால் சின்னதம்பி யானையை பார்க்க வரும் பொதுமக்களை சுமார் 200 அடி தூரத்துக்கு அப்பாலேயே நீண்ட தூரத்திலேயே தடுத்து நிறுத்தி விடுகின்றோம். இப்போது இங்கேயே கடைகள் வேறு போட்டு இதை தற்காலிக சுற்றுலாவாக மாற்றி விட்டனர். எப்போது வேண்டும் என்றாலும் கூட்டத்தினரை நோக்கி சின்னதம்பி யானை ஓடி வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் அதை பார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்றனர்.


Next Story