நோய் தாக்குதலால் கத்தரி செடிகளில் விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் வேதனை


நோய் தாக்குதலால் கத்தரி செடிகளில் விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 12 Feb 2019 4:06 AM IST (Updated: 12 Feb 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

சாக்கோட்டை பகுதியில் கத்திரி செடிகளில் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே சாக்கோட்டை, பெரியகோட்டை, பெத்தாச்சிகுடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் நாட்டு கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகள் மிகுந்த சுவை உடையவை. இந்த பகுதியில் விளையும் காய்கறிகளை காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மீமிசல், கோட்டைபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேரிடையாக வந்து வாங்கி செல்வார்கள். இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்கள் அருகே சிறு, சிறு கடைகள் அமைத்து குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சாக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி செடிகளில் நோய் தாக்கி வருகிறது. நோய் தாக்குதல் அதிகமாக இருப்பதால் காய்கள் முளைக்கும் முன்பே பூவிலேயே விளையாமல் போய் விடுகிறது. இதனால் கத்தரியில் விளைச்சல் காண முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கத்திரி செடிகளில் தாக்கியுள்ள நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு மருந்துகளை தெளித்து பார்த்துள்ளனர். ஆனால் நோய் தாக்குதல் கட்டுக்குள் வரவில்லை.

விவசாயிகள் கூறுகையில், சாக்கோட்டை பகுதியில் சுமார் 200 ஏக்கரில் கத்திரி, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துள்ளோம். அதில் குறிப்பாக கத்திரியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நாங்களும் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தி பார்த்துவிட்டோம். எந்த பலனும் இல்லை. கத்தரியில் தாக்கியுள்ள நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. தோட்டகலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கத்திரி செடிகளில் தாக்கியுள்ள நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைகளை வழங்கினால் மட்டுமே விவசாயிகள் விளைச்சல் காணமுடியும் என்றனர்.


Next Story