பிளாஸ்டிக் தடை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு


பிளாஸ்டிக் தடை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:23 PM GMT (Updated: 11 Feb 2019 11:23 PM GMT)

பிளாஸ்டிக் தடை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது என்று உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் பாபு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருகிற 1–ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், கடைகளில் வைத்து வியாபாரம் செய்யவும் முழுமையாக தடை செய்ய இருப்பதாக புதுவை அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்ட மக்கள் கருத்தினை கேட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருப்பதுபோல் இங்கும் தடை என்பது ஒரு தவறான கணிப்பு. ஏனென்றால் புதுச்சேரி உற்பத்தி செய்யக்கூடிய மாநிலம். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் உலகமெங்கும் அனுப்பப்படுகிறது.

புதுவையில் உற்பத்தியாகும் பொருட்களில் 1 சதவீதத்துக்கும் கீழ்தான் புதுவையில் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 99 சதவீதமும் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்வது பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வல்ல. இனி நமது மாநிலத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்கள் மத்தியில், அரசு நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தொழிலை முடக்கிவிடுவார்கள் என்பதற்கு முன் உதாரணமாகிவிடும்.

இந்த தடை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியது. உள்ளூரில் குளிர்பானம், தண்ணீர், அரிசி மாவு, சர்க்கரை, பருப்பு, சிப்ஸ், தின்பண்டங்கள் போன்றவற்றை தயாரித்து சந்தையில் பிளாஸ்டிக் கப்புகளில் அடைத்து வியாபாரம் செய்பவர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் மட்டும்தான். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த ஒரு தடையுமின்றி பிளாஸ்டிக் கப்புகளில் குளுக்கோஸ் வாட்டர், ஜாம், ஆரஞ்சு ஜூஸ், கப் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் கப்புகள் போன்றவற்றை எந்தவித தடையுமின்றி எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவர்களுக்கு தடையில்லை.

புதுவைக்கு வருமானம் ஈட்டித்தரும் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து தடை செய்வது மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. புதுவை மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு சேரிக்கும் மொத்த பிளாஸ்டிக் கழிவுகள் 1,800 கிலோ என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதையும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு உதவியும், சலுகையும் அளித்தால் மிக எளிதாக கையாண்டு விடலாம்.

புதுவை மாநிலத்தில் அரசு அனுமதி பெற்று 200–க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் நேரடியாக 10 ஆயிரம் பேரும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் பயன்பெறுகின்றனர். இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த செயல் இதுவரை எங்கும் நடந்ததில்லை.

இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் மிகுந்த குழப்பம் நிகழ்வதை உணர்ந்து மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் 31–ந்தேதி எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை நெறிமுறை செய்யவேண்டும், எவைகளை தடை செய்யவேண்டும் என்று ஆராய்ந்து பரிந்துரை அளிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும் அந்த குழு பரிந்துரை தந்தபின் பிளாஸ்டிக் பற்றிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கூறியிருக்கின்ற நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கனிவுடன் பரிசீலனை செய்து தடை நீக்கவும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாளவும், ஒழுங்குபடுத்தவும், தடை செய்ய பொருட்களை கண்டறியவும் ஒரு குழு அமைக்கவேண்டும்.

இவ்வாறு பாபு கூறினார்.


Next Story