கந்து வட்டி கொடுமையால் பரிதாபம் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை


கந்து வட்டி கொடுமையால் பரிதாபம் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2019 5:00 AM IST (Updated: 15 Feb 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு, தபால் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர மாணிக்கம் (வயது 60). இவருடைய மனைவி நேச வடிவு. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சுந்தர மாணிக்கம் ஆரல்வாய்மொழி தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 9-ந் தேதி காலையில் அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் சுந்தரமாணிக்கத்தை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

இதுகுறித்து நேசவடிவு சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.

பிணமாக கிடந்தவரின் சட்டை பையில் ஒரு கடிதம் இருப்பதை போலீசார் கண்டனர். அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தவர், காணாமல் போன சுந்தரமாணிக்கம் என்பதும், கந்து வட்டி கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

மேலும் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் பல உருக்கமான தகவல்களை அவர் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனுவாக அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் சுந்தரமாணிக்கம் எழுதிய விவரம் வருமாறு:-

எனக்கு 3 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. எனது மகள்களின் மேல்படிப்பிற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் கந்து வட்டிக்கு கடன் வாங்கினேன். இதனால் 4 வருடங்களாக கடும் இன்னலுக்கு ஆளானேன். அசலுக்கு மேல் வட்டி கட்டி விட்டேன். கடந்த 4 மாதங்களாக வட்டி கட்ட மிகவும் சிரமப்பட்டேன்.

இதனால் எனக்கு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தொந்தரவு செய்தனர். அசலையும், வட்டியையும் கேட்டு தகாத வார்த்தைகள் பேசினர். இது என்னுடைய மனைவி மற்றும் வயதுக்கு வந்த என்னுடைய 2 மகள்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளித்தது. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதன்பிறகும் கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவு குறையவில்லை. மேலும் அவர்கள் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இவர்களுடைய கடனை அடைக்க வீட்டை விற்று விடலாம் என்று நினைத்தேன். ஆனால் வீடும் அடமானத்தில் இருந்ததால், வீட்டை விற்பதில் சில சிக்கல்கள் இருந்தன. இதனை அறியாமல் கந்து வட்டிக்காரர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். என்னால், எனது மனைவியும், மகள்களும் படும் வேதனையை சகித்து கொள்ள முடியவில்லை. இதனால் தினம், தினம் செத்து பிழைப்பதை விட நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில், கந்து வட்டிக்காரர்களின் சிலரது பெயர்களை அவர் எழுதி வைத்துள்ளார். கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முதல்-அமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதி விட்டு சுந்தரமாணிக்கம் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஷம் குடித்து சுந்தரமாணிக்கம் இறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்து வட்டிக்காரர்களை தேடிவருகின்றனர். 

Next Story