விருதுநகர் ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? அதிகாரிகள் பாராமுகம்


விருதுநகர் ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? அதிகாரிகள் பாராமுகம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:34 PM GMT (Updated: 15 Feb 2019 10:34 PM GMT)

விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு முன்பாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் வேண்டும் என கடந்த 2008–ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு பின் மதுரை ஐகோர்ட்டு தலையிட்டதை தொடர்ந்து மேம்பால கட்டுமானப்பணி கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணி முடிவடைந்து பாலம் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் திட்டப்பணி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்னும் பணி முழுமையாக முடிவடையாத நிலை உள்ளது.

மேம்பால கட்டுமான பணிக்காக மின்வாரியம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் அவர்கள் செய்யவேண்டிய மின்கம்பம் மற்றும் குடிநீர் குழாய் மாற்றம் செய்யும் பணிகளை ஓரளவு காலதாமதமானாலும் முடித்துவிட்டனர். ஆனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைப்பதற்காக 1½ ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி நிர்வாகத்திடமிருந்து ரூ.56 லட்சத்தை பெற்றுவிட்ட நிலையில் இன்னும் அந்த பணிகளை முழுமையாக முடிக்காத நிலையே உள்ளது. இந்த பணியினையும் நகராட்சி நிர்வாகம் வலியுறுத்திய பின்புதான் குடிநீர் வடிகால் வாரியம் செய்துள்ளது. இதனால் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவது தாமதமாவது தவிர்க்கமுடியாததாகி வருகிறது. மேலும் சர்வீஸ் ரோடு அமைப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலும் பாலம் பயன்பாட்டிற்கு வருவதை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை.

இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறையினரும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல் பணிகளை முடக்கம் அடைய செய்துவிட்டு பாராமுகமாகவே உள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால் அதன்பின்பு தேர்தல் நடைமுறை முற்றிலும் முடிந்த பின்புதான் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும். அதற்கு தற்போதில் இருந்து குறைந்தபட்சம் மேலும் 7 மாத காலம் ஆகிவிடும்.

எனவே மாவட்ட நிர்வாகமும் விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் இப்பிரச்சினையில் தலையிட்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடங்கியுள்ள பணிகளை முடுக்கிவிட போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story